வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்பை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போர் நடவடிக்கைகளை டிரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய்களின் அடிப்படையினாலான போர் ஏற்க முடியாது என முழக்கமிட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரம்புக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு போர் குற்றவாளி என்றும் அவர் குற்றம் சாட்டினர். கனடாவின் டொரோண்டோ நகர் அமெரிக்கா தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன அழிப்பில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு டிரம்ப் ஆதரவு அளிப்பதாக புகார் கூறினர். இன்னொரு போரை உலகம் எதிர்கொள்ள முடியதும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்ததோடு, ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் டஅமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பயணங்களை கவனமாக திட்டமிட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனம்: அதிபர் டிரம்ப்பை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் appeared first on Dinakaran.