ஈரோடு: ஈரோடு அதிமுகவில் 7 கோஷ்டியினராக பிரிந்து அடித்துக் கொள்வதால்தான் அக்கட்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. சட்டமன்றத்தேர்தல், மக்களவைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஈரோட்டில் அதிக பணபலம் படைத்த அசோக்குமாருக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், கடந்த 15 ஆண்டுகளாகவே, மாநகர மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கமே செயல்பட்டு வருகிறார். இதுவும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கட்சியினரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஈரோட்டில் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியம் தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் எம்.பி. செல்லகுமரன் சின்னையன் தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ கிட்டுசாமி ஆகியோரின் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக செயல்பட்டு வருகிறது.
முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, கேவிராமலிங்கம் அணியில் இருந்தாலும், அவரது தலைமையிலும் ஒரு அணி செயல்படுகிறது. ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. அதிமுக தலைமையின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக, முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ கிட்டுசாமி, சா.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒதுங்கி நிற்கின்றனர்.
குறிப்பாக, அதிமுகவில் 7 கோஷ்டிகள் செயல்படுவதாலும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி கிடைக்காததாலும், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் மாவட்டச் செயலாளர் கே.வி. ராமலிங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்த பலரும் சேர முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இப்படி ஈரோட்டில் அதிமுகவினரிடையே கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் உள்ளதால்தான், கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அக்கட்சி புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளில் கட்சியை வளர்க்காமல், தங்களது சுய ஆதாயத்துக்காக செயல்பட்டதாலேயே, தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்தோம். மக்களவை தேர்தலில் அசோக்குமாருக்கு சீட் கொடுத்தது தொடர்பாக, அனைத்து நிர்வாகிகளையும் தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தலைமை அவ்வாறு எங்களை அழைக்கவில்லை.
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டாலும்கூட, தற்போது எங்களின் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலால், தேர்தல் செலவோ, பணியோ செய்ய யாரும் தயாராக இல்லை. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே, இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள்ளே ஈரோட்டில் அதிமுக கூடாரமே காலியாகிடுமோ? என்ற அச்சம் எங்களிடத்தில் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
* கோஷ்டி பூசல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த பலரும் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
The post ஈரோடு அதிமுகவில் 7 கோஷ்டிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் appeared first on Dinakaran.