சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.