மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற பொதுவான விதிப்படி, நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கடந்த 2021 ஏப்ரலில் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தபோது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், மாரடைப்பால் காலமானார்.