ஈரோடு: அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு, 4-வது ஆண்டில் மூன்றாவது தேர்தல் போன்ற காரணங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்னர். இதனை 67.97சதவீத வாக்குப்பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடந்தது.இந்த தேர்தலின்போது வாக்காளர்கள் பட்டியில் அடைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு தொடங்கி பணம், பரிசுப்பொருள் விநியோகம் என ஈரோடு கிழக்கு திருவிழா கோலம் பூண்டது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்களின் பிரச்சாரத்தால் இடைத்தேர்தல் களை கட்டியது. இந்த இடைத்தேர்தலில், 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.