ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், 3 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் தொடர்பான புகைப்படங்கள் அகற்றப்பட்டு, அரசியல் பேனர்கள், விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.