ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் மன்னன் உட்பட 3 பேர் மனுதாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 10, 13, 17ம் தேதிகளில் மட்டும் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். இதையடுத்து, 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் 20ம் தேதியாகும். தொடர்ந்து, பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் (ஐஆர்டிடி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று தேர்தல் மன்னன் பத்மராஜன் (64) சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து முதல் நபராக நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த இவர் பஞ்சர் கடை வைத்துள்ளார். இதுவரை 246 முறை பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ள இவர் கடந்த 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். தொடர்ந்து தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் போட்டியிட நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இது அவர் போட்டியிடும் 247வது தேர்தல் ஆகும்.
2வது நபராக கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர்முகமது (67) வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 45 தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள அவருக்கு இது 46வது தேர்தல் ஆகும். கோவையில், பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் இவர், தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க்கக்கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேடத்தில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இவர் கடந்த 2023 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செருப்பு மாலை அணிந்து வந்து வேட்பு மனுதாக்கல் செய்தார். நேற்று, சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்பவரை போல நெருப்புச்சட்டியுடன், சேகண்டி அடித்து வந்து, பால் ஊற்றி இறுதிச்சடங்கு செய்தவாறு வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
3வது நபராக கரூர் ஆத்தூர் பிரிவை சேர்ந்த மதுரை விநாயகம் (51) என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் ஆபிஸர் பொறுப்பு வகித்து வந்தவராவார். கடந்த 2016ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற இவர், தேர்தல்களில் போட்டியிடுவது இது 3வது முறையாகும். இதற்கு முன்னர் எம்பி தேர்தலில் பொள்ளாச்சியிலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் இவர் போட்டியிட்டு உள்ளார். நாட்டின் எல்லையில் மக்களுக்காக பணியாற்றிய நான் இன்று தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதற்காக இந்த தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறேன் என தெரிவித்தார். முதல் நாளான நேற்று மேற்கண்ட 3 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது: தேர்தல் மன்னன் உட்பட 3 பேர் மனுதாக்கல் appeared first on Dinakaran.