ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட செந்தில் முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுகவில் இருந்து அவரை நீக்கிய நிலையில், செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுக-வினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, செந்தில் முருகன், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுக-வில் இணைந்து வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-வில் இணைந்தார் சுயேட்சை வேட்பாளர் செந்தில் முருகன்..!! appeared first on Dinakaran.