ஈரோடு: ஈரோடு திண்டலில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு திண்டலில் பிவிபி மற்றும் இதே நிறுவனத்திற்கு சொந்தமான தெற்கு பள்ளத்தில் பிபிவிபி என்ற இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலக்கூடிய இந்த பள்ளிகளில் இன்று வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்த இரு பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும். அது வெடிக்க இருப்பதாகவும் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பள்ளி வகுப்புகளில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு பள்ளியின் மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இது குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் மர்ம நபர் கொடுத்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பள்ளியின் மைதானம் மற்றும் அங்கிருக்கக்கூடிய வளாகம், அறைகள் என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மர்ம நபர் குறித்து போலீசார் மின்னஞ்சல் முகவரியை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஈரோடு திண்டலில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.