சிவகாசி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது திமுக ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடு என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அவரது உருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கொடை வள்ளல் என போற்றப்பட்ட எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட அதிமுக மக்களுக்கு கொடுக்கின்ற கட்சியாக இருக்கின்றது. கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முறை தேர்தல் நேர்மையாக நடைபெறாது, அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவர் என்பதால் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தலைமை அறிவித்துள்ளது. திமுக ஆட்சியின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன.