ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்றுவரும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே. ஏ செங்கோட்டையன் தலைமையில் கூட்டமானது தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போது கைகலப்பு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதி பொறுப்பாளரான ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பூத் கமிட்டி அமைப்பது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கே. ஏ செங்கோட்டையன் இந்த கூட்டத்தில் பேசி கொண்டிருந்த போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து இவ்வளவு பெரிய கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நிர்வாகிகளுக்கு கட்சியிலிருந்து உரிய முறையில் அழைப்பு விடுப்பதில்லை. எந்த தகவலும் எங்களுக்கு சொல்லபடுவதில்லை என்ற குற்றசாட்டை தெரிவித்தார்.
உடனடியாக கே. ஏ செங்கோட்டையன் மேடைக்கு அந்த நிர்வாகியை அழைத்து அவரை சமாதானபடுத்த கூடிய முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சக நிர்வாகிகள் பிரவீனை சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையனிடம் பேசவிடாமல் தடுத்து அங்கிருந்து வெளியே இழுத்து சென்றார்கள். அப்போது தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற கூடிய பகுதியில் வெளியே சூழ்ந்து கொண்டு சக நிர்வாகிகள் அவரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த சில நிர்வாகிகள் பிரவீனை பாதுகாப்பாக மண்டபத்திலிருந்து வெளியே அழைத்து சென்றனர். வெளியே நின்றிருந்த நிர்வாகிகளை சமாதானம் செய்து கே. ஏ செங்கோட்டையன் மீண்டும் கூட்டம் நடைபெற கூடிய அரங்கிற்கு அழைத்து சென்றார். செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் எழுந்து இது போன்ற பிரச்னையை எழுப்பியதும் சக நிர்வாகிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
The post ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் சலசலப்பு: செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி!! appeared first on Dinakaran.