சென்னை: ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கழிவுநீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா யோகா மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு வரும் 26ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிவராத்திரி விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஒலி மாசு ஏற்படும் வகையில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விதிமுறைகளை பின்பற்றிதான் விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவையைச் சேர்ந்த சிவஞானன் என்பவரது மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கழிவுநீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா யோகா மையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
The post ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரிக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.