பிரஸ்ஸல்ஸ்: உக்ரைனுக்கு அளிக்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரின் அறிவிப்பை அடுத்து, போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு குறுகிய காலத்தில் உதவ வேண்டிய நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைமையகத்தில் இன்று அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஜெர்மனியின் அடுத்த அதிபர் ப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் உச்சி மாநாட்டுத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர், ஐரோப்பாவின் பாதுகாப்பை குறுகிய காலகட்டத்தில் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், உக்ரைனுக்கு உடனடியாக கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.