வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.இந்த நிலையில், டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்குமா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்த டிரம்ப்,‘‘ உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் அந்த நாடு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். போர் ஒருபோதும்நடந்திருக்கக்கூடாது. உங்களுக்கு (அமெரிக்கா) திறமையான அதிபர் இருந்திருந்தால் போர் ஏற்பட்டிருக்காது.நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் போர் நடந்திருக்காது.
ரஷ்யா ஒரு போதும் உக்ரைனுக்குள் நுழைந்திருக்காது. புடினுடன் எனக்கு மிகவும் வலுவான புரிதல் இருந்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்காது. அவர் மிகவும் புத்திசாலி. மேலும் மத்திய கிழக்கில் ஒரு போதும் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அதிபர் புடினை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும், அவரை நான் சந்திப்பேன். லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு மோசமான சூழ்நிலை.
நிறைய பேர் கொல்லப்பட்டுள்ளனர், இடிப்பு நடவடிக்கையை போல் நகரங்கள் உடைந்து கிடக்கின்றன’’ என்றார். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்புவீர்களா என்று கேட்டபோது,‘‘அது குறித்து ஆய்வு செய்வோம். புடினுடம் பேசுவோம்’’ என்றார்.
* ஏஐ தொழில்நுட்பத்துக்கு நிறுவனம்
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்பை உருவாக்க 500 பில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ.43 லட்சம் கோடி) நிதி ஒதுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஓரக்கிள், சாப்ட் பேங்க் மற்றும் ஓபன் ஏஐயுடன் சேர்ந்து ஸ்டார்கேட் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
* சீன பொருட்களுக்கு 10 % வரி: அதிபர் டிரம்ப் பரிசீலனை
டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வரி விதி விதிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று கூறியிருந்தார்.இந்த நாடுகள் போதை பொருட்களையும் எல்லை தாண்டி சட்ட விரோதமாக நாட்டுக்குள் வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் வரை வரிவிதிப்பு அமலிலில் இருக்கும் என அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில்,வெள்ளை மாளிகையில்,ஆரக்கிள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எலிசன்,சாப்ட் பேங்க் தலைமை நிர்வாக அதிகாரி மசயோஷி சோன், ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆகியோருடன் டிரம்ப் பேட்டியளித்தார்.
அப்போது, டிரம்ப் கூறுகையில்,‘‘வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 10 % வரி விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். பென்டானையில் என்ற போதை பொருளை மெக்சிகோ,கனடாவுக்கு சீனா அனுப்புகிறது. இந்த போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு 10 % வரி விதிக்கப்படும்’’ என்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசிய போது,புதிய வரிவிதிப்பு குறித்து பேசினீர்களா என்று கேட்ட போது,‘‘வரி விதிப்பு குறித்து அதிகமாக எதுவும் பேசவில்லை. பென்டானையில் நாட்டுக்கு தேவையில்லை. இதை நாட்டுக்குகள் வரவிடாமல் தடுப்பேன்’’ என்றார். பென்டானையில் அதிக போதை தரக்கூடியது. இந்த போதை பொருளால் அமெரிக்காவுக்கு ஆபத்து என அந்த நாட்டின் போதை தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
The post உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.