வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.