நியூயார்க்: உக்ரைன் போரை நிறுத்துங்கள் என்று ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவை காயப்படுத்த விரும்பவில்லை.
அவர்களை நேசிக்கிறேன். ரஷ்ய அதிபர் புதினுடன் எப்போதும் நல்ல உறவையே கொண்டிருந்தேன். தீவிர இடதுசாரி நாடாக இருந்த போதும் ரஷ்யாவுடன் நல்லுறவையே வைத்திருந்தேன். 2ம் உலகப்போரை வெற்றி கொள்வதற்கு ரஷ்யா பேருதவியாக இருந்தது என்பதைம், ரஷ்யாவை சேர்ந்த 6 கோடி பேர் உயிரிழந்தனர் என்பதையும் மறந்துவிட கூடாது. இப்போது ரஷ்ய பொருளாதாரம் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது.
ரஷ்ய அதிபருக்கு சொல்வது இந்த கேலிக்கூத்தான போரை நிறுத்துங்கள் என்பதுதான். இந்த போர் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேதான் போகும். இப்போது நாம் ஒரு உடன்பாடு ஏற்படுத்தவில்லை என்றால் வேறு வழியில்லை. விரைவில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனையாகும் ஒவ்வொன்றுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டியிருக்கும். தடைகளையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கும். வேறு சில நாடுகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும்.
நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போரே நடந்திருக்காது. இப்போதே இந்த போரை முடித்து கொள்ளலாம். எளிதான வழி, கடினமான வழி என 2 வழிகள் நமது முன் உள்ளன. அவற்றில் நாம் எப்போதும் எளிதான வழியையே தேர்வு செய்ய வேண்டும். இப்போது நாம் உடன்பாடு ஏற்படுத்தி கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது.
The post உக்ரைன் போரை நிறுத்துங்கள்: ரஷ்ய அதிபருக்கு டிரம்ப் வேண்டுகோள் appeared first on Dinakaran.