கீவ்: உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில், ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை சனிக்கிழமை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட 8 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு நிர்வாக கட்டிடம், 30 கார்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கார்கிவ் ஆளுநர் ஒலேக் சினேகுபோவ் டெலிகிராமில் வெளிட்டுள்ள செய்தியில், "கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மாகாணத்திலுள்ள போகோடுகிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களின் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்" என்று தெரிவித்துள்ளார். ஒடேசாவில் நடந்த ஒரு ட்ரோன் தாக்குதல் காரணமாக பல்வேறு தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில், உபகரணங்களுடன் நின்ற ஒரு விவசாய வாகனம், ஒரு சேவை நிலையக் கட்டிடம், ஒரு வானக உதிரி பாக நிலையம், திறந்த வெளியில் இருந்த சூரிய உற்பத்தி பேனல்கள் பாதிக்கப்பட்டன.