திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இதன்படி, பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட அலமாதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு, மருந்தகம், வருகை பதிவேடு மற்றும் பொது மக்களிடம் சிகிச்சை தொடர்பான மருத்துவ பணிகள் குறித்தும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் கற்றல் திறன் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கடைகள் மற்றும் மேற்கூரைகளுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி கோமதி அம்மன் தெருவில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
வேளார் தெருவில் திட்டத்தில் ரூ.36.84 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பணி, ஆங்காடு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் பணிகள், பழைய எருமைவெட்டிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை தமிழ்நாடு இயக்கம் நாற்றங்கால் பண்ணை அமைத்தல் பணிகள், நெற்குன்றம் ஊராட்சியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரமைப்பு திட்டம் 2024 – 25 திட்டத்தில் வீடுகட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர்காலனியில் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை, பொன்னேரி பாலாஜி நகரில் தோட்டக்கலை – மலை பயிர்கள் துறைகளில் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் காளான் வளர்ப்பு குடில் அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பொன்னேரியில் ரூ.65.26 கோடி மதிப்பீட்டில் சாலை, மேம்பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். வேளாண்மை துறை அலுவலர்களிடம் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தனித் துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையர் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, பேரூராட்சிகள், எஸ்.உதவி இயக்குநர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் இருந்தனர்.
The post ‘’உங்களை தேடி உங்கள் ஊரில்’’ திட்டத்தில் சாலை பணி, பள்ளி கட்டிட பணிகள்: திருவள்ளூர் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.