சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; “முதலில் ஒரு விளக்கத்தை நான் சொல்ல விரும்புகிறேன். நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் இங்கு உரையாற்றிய போது ஒரு இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். ஒரு நீதியரசர் தமிழில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆங்கிலத்தில் பேசினார். ஒரு நீதியரசர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆனால், தமிழில் பேசினார். இதுதான் இரு மொழிக் கொள்கை. இது தமிழ்நாடு. இக்கட்டான நிலை எல்லாம் கிடையாது. நல்ல நிலைதான் இது. நேற்று நிதிநிலை அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்தோம். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு, இன்றைக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஸ்ரீராம் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அவருடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அதனால், நான் பெருமைப்படுகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து சென்று இந்திய அளவில் நீதித்துறைக்கு பலவிதங்களில் பெருமை சேர்த்து கொண்டிருக்கக்கூடிய உச்சநீதிமன்ற நீதியரசர் மதிப்பிற்குரிய ஆர். மகாதேவன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற நீதியரசர் மதிப்பிற்குரிய கே.வி. விஸ்வநாதன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற நீதியரசர் மதிப்பிற்குரிய எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மெட்ராஸ் பார் அசோசியேஷனின் போற்றத்தக்க 160-ஆம் ஆண்டு பயணத்தைக் குறிக்கும் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை தந்த அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது நம்முடைய சென்னை உயர்நீதிமன்றம்! நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் அதை விளக்கியிருக்கிறார். எனவே, அதுகுறித்து நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
1862-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன், 1865-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அந்த ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் கூட்டம் நடந்தது. இன்றைக்கு அதனுடைய 160-ஆம் ஆண்டை கொண்டாடக்கூடிய வகையில் இதை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும், முற்போக்கான சமூக வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதிலும் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்!
வழக்கறிஞர்கள்தான், சமூகத்தில் நிலவுகின்ற அநீதி என்ற நோயைக் குணப்படுத்துகின்ற மருத்துவர்கள் ! அதுமட்டுமல்ல, வழக்கறிஞர்கள் சங்கம் என்பது, சமூகநீதியைக் காப்பதிலேயும், தனிநபர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலேயும் முதன்மை அமைப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது!
‘சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். ஜனநாயகத்தை செதுக்குவதில், வழக்கறிஞர்கள் மற்றும் நீதியரசர்களுடைய பங்களிப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உருவான வழக்கறிஞர்கள், இந்தியாவின் பிற உயர் நீதிமன்றங்களிலும் தங்களுடைய அறிவாற்றலால், வாதத்திறமையால் புகழடைந்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு மெருகூட்டுகின்ற பல தீர்ப்புகளை, நம்முடைய நீதியரசர்கள் வழங்கியிருக்கார்கள். இன்றைக்கு வரைக்கும், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதில், நம்முடைய சென்னை உயர்நீதிமன்றமும் – மெட்ராஸ் பார் அசோசியேஷனும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்!
மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160-ஆவது ஆண்டு விழாவினை சேர்த்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! அதற்காக என்னுடைய வாழ்த்துகள்!
“அரசமைப்பு என்பது, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான ஒரு கருவி” என்றும், “அரசமைப்பு என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கையாக அங்கீகரிக்கும் ஒரு முறை” என்றும் மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்.
அரசமைப்பு ரீதியாக, இந்தியா ஒரு ஜனநாயக – சோசலிச – மதச்சார்பற்ற – இறையாண்மை பொருந்திய குடியரசு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.
அரசமைப்புச் சட்டமானது அரசாங்க கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் அதிகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதோடு, அடிப்படை உரிமைகள், மையக் கொள்கைகள் மற்றும் தங்கள் நாட்டிற்கான குடிமக்களின் கடமைகளையும் வரையறுக்கிறது.
இந்தியாவில் வெவ்வேறு மதம், இனம் மற்றும் பண்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், நம்முடைய அரசமைப்புச் சட்டம், அதன் மாற்றும் அணுகுமுறையின் காரணமாக உயிர்ப்புடன் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக உறுதியான தூண்களாக நிற்கும் சுதந்திரமான நீதித்துறை, சிறந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடைய பங்களிப்பு ஆகியவை அரசமைப்பின் உயிர்ப்பான நிலைத் தன்மைக்குக் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மைக் காலங்களில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
நிதி, கல்வி போன்ற பல விஷயங்களில், மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கற்றறிந்த நீதியரசர்களும், வழக்கறிஞர்களும், இந்த அவையும் அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள்.
நம்முடைய அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல், நீதித் துறைக்கும், வழக்குரைஞர்களின் நலனுக்கும், சட்டக்கல்விக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்திற்கு ஆண்டுதோறும் அரசு வழங்கும் 8 கோடி ரூபாய் மானியத்தை 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.
இயற்கை எய்திய வழக்குரைஞர்களின் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
உயிரிழந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் அப்போது அதிகமாக நிலுவையில் இருந்ததை கருத்தில்கொண்டு, கூடுதல் மானியமாக 20 கோடி ரூபாய் வழக்குரைஞர்கள் நல நிதியத்துக்கு வழங்க ஆணையிடப்பட்டது. கூடுதலாக ரூ.2 கோடி நிதி வழங்கியிருக்கிறோம்.
நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய அரசு பொறுப்பேற்றதில் இருந்து,
6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்;
5 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள்;
13 சார்பு நீதிமன்றங்கள்;
2 கூடுதல் சார்பு நீதிமன்றங்கள்;
7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்:
18 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்;
3 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள்:
1 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்;
7 வணிக நீதிமன்றங்கள்:
அரசு சட்டக்கல்லூரிகளில், காலியாக இருக்கின்ற 2 பழங்குடியினர் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்கள், 8 இணைப் பேராசிரியர்கள், 64 சட்ட உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 60 சட்ட முன்படிப்பு உதவிப் பேராசிரியர்கள் என்று மொத்தம் 132 காலி பணியிடங்கள நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 24.01.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு நிரப்பப்படவுள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தித் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நீதித் துறை உட்கட்டமைப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தித் தர தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் வருகைபுரிந்துள்ள இந்த நேரத்தில், சென்றமுறை இதே இடத்தில் நான் வைத்த ஒரு முக்கியமான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுபடுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்தால், தென்மாநில மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மீண்டும் இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னோடியான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி, என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“அரசமைப்புச் சட்டம் என்பது வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம்தானே எனக் கருதக்கூடாது; அது நமது வாழ்க்கைப் பயணத்தில், நமது வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனமாகும்; அது எப்போதுமே இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்குகிறது” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார்!
அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும் என்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்” என உரையாற்றினார்.
The post உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்தால் தென் மாநில மக்கள், வழக்கறிஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்: முதலமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.