புதுடெல்லி: பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்ஜேடி எம்.பி. மிசா பாரதி, முதல்வரின் உடல் மற்றும் மனநலம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் பிஹார் யாருடைய கையில் இருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லாலு பிரசாத்தின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி கூறுகையில், "தேசிய கீதம் பாடப்பட்ட போது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தெளிவாக இல்லை. அவர் மன ரீதியாக சரியாக உள்ளாரா என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவமதித்து வருகிறார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் பிஹார் யாருடைய கைகளில் இருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.