
சினிமா என்பது வெறும் காட்சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்வையாளரின் மனதை குறிப்பிட்ட திசையில் இழுத்துச் சென்று உணர்ச்சிகளைத் தூண்டும் ஒர் அற்புதக் கலை. ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் படமாக்குகிறோம் என்பதே அதன் உள்மனத் தாக்கத்தையும், கதையின் போக்கையும் தீர்மானிக்கிறது. ஒளிப்பதிவாளரின் காட்சிப் பார்வையானது இதயத்தில் ஒலிக்கும் மென்மையான குரல் போன்றது – அது பார்வையாளரின் உணர்வுகளை உயர்த்தலாம், தாழ்த்தலாம் அல்லது குழப்பத்தில் ஆழ்த்தலாம்.

உயரமும் தாழ்வும் – உணர்வுகளின் மாற்றம்: ஹை ஆங்கிள் ஷாட்டுகள் மற்றும் லோ ஆங்கிள் ஷாட்டுகள், மனித உணர்வுகளை எதிரெதிர் திசைகளில் மாற்றும் சக்தி வாய்ந்த கருவிகள் எனலாம். ஆர்சன் வெல்ஸ் இயக்கிய ‘சிட்டிசன் கேன்’ (Citizen Kane 1941) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், லோ- ஆங்கிள் காட்சிகள், கதாபாத்திரத்தின் அதிகாரத்தையும் ஆணவத்தையும் அழகாக வெளிப்படுத்தின.

