தமிழக இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்தது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர், முகவரி, மொபைல் எண்களை சரிபார்த்தபோது ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் போலி என்று கண்டறியப்பட்டு, அந்த உறுப்பினர் விவரங்களை அக்கட்சி நீக்கியுள்ளது. கட்சித் தலைமை அளிக்கும் நிர்பந்தம் காரணமாக போலியாக உறுப்பினர்களைச் சேர்த்து கட்சி நிர்வாகிகள் பெயர் வாங்கிக் கொள்வதும், அந்த எண்ணிக்கையை கட்சித் தலைமை தங்களது கட்சியின் பலம் என்று மார்தட்டிக் கொள்வதும் நீண்டகாலமாக இருந்துவரும் நடைமுறையாகும்.
உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக அடையாளம் காட்டப்படுகிறது. அக்கட்சி குறுஞ்செய்தி மூலம் நடத்திய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆளுங்கட்சியான பிறகு எடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளையடுத்து, அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.