சென்னை: தமிழக சுகாதார துறையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழக சுகாதார துறையில் 2553 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 24,000 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் 4,585 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். அதன்பிறகு கூடுதலாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் 89 சேர்த்து 2642 மருத்துவர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு எழும்பூரில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள், 15 நாட்களுக்குள் அந்தந்த மருத்துவமனைகளில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கு, அவர்கள் விருப்பப்படும் இடங்கள் கிடைக்காது, இறுதியாக காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கும் விழா வரும் 26ம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வன்சன் சென்டரில் நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
The post உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது appeared first on Dinakaran.