லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்நிகழ்வுக்கான காரணத்தை கண்டறிய ஜான்சி கமிஷனர் விபுல் துபே மற்றும் டிஐஜி ரேஞ்ச் கலாநிதி நதானி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணையில், “இது திட்டமிட்ட நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. தன்னிச்சையாக நடந்த ஒரு விபத்து. சுவிட்ச்போர்டில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதுள்ளது, குழந்தைகள் வார்டில் ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்படாததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை” என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக் குழுவின் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.