சென்னை: உப்பாறு அணையிலிருந்து பிப்ரவரி 3 முதல் 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாணை எண். 15, நீர்வளத்துறை, நாள்.10.01.2025 ன்படி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும், 19.01.2025 முதல் 25.01.2025 முடிய 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, தண்ணீர் திறப்பின்போது பாசன கால்வாய்கள் முழுமையாக தூர் வாரப்பட்ட பின்பு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிய விவசாய அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று இந்த அரசாணையினை இரத்து செய்தும் தற்போது உப்பாறு அணை பாசனக்கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 01.02.2025-க்குள் நிறைவு பெறும் என்பதை கருத்தில் கொண்டு 03.02.2025 முதல் 10.02.2025 முடிய 7 நாட்களுக்கு மொத்தம் 110.07 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர். கண்ணன் கோயில். மடத்துப்பாளையம். வரப்பாளையம். வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
The post உப்பாறு அணையிலிருந்து பிப்.3 முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.