இலங்கை: மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க ‘இலங்கை மித்ர விபூஷனா’என்ற விருது வழங்கி கவுரவித்தார். இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். மேலும், இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
செய்தியாளர்கள் சந்திப்பு: இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியது: “இன்று அதிபர் திசநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷனா’ விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாகும். இந்த விருது என்னை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் கவுரவப்படுத்துகிறது. இது இந்திய – இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், ஆழமான நட்புறவுக்கு செலுத்தும் மரியாதையாகும். இந்த கவுரவத்திற்காக இலங்கை அதிபர், இலங்கை அரசு, இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.