சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் 16-வது ஆண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர் நீதிமன்றம் வந்த பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் கடந்த 2009 பிப்.19 அன்று சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீஸார் உயர் நீதிமன்ற வளாகத்தில் தடியடி நடத்தினர். இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் என பலரும் படுகாயமடைந்தனர்.