தாம்பரம்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு கோடை விடுமுறையை உற்சகமாகவும், அறிவு நிரம்பியதாகவும் மாற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உயிரியல் பூங்கா தூதுவர் திட்டத்தை இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது. 5ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு படிக்கும் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் பல்வேறு வகையான வனவிலங்குகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தனித்தனி வகுப்புகளாக பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பூங்கா வின் செயல்பாடு பற்றி பூங்கா களத்துக்கு சென்று அறியும் வாய்ப்பு பெறுவார்கள்.
உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் பூங்கா கல்வியாளர்களால் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சி தாள்களுடன் நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை மாணவர்களுக்கு வழங்கப்படும். 2 நாள் காலை 9.30 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்கள் கோடை தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு 5 பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 14, 15, 21, 22, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளிலும், 4.6.2025 முதல் 5.6.2025 வரை ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவர்கள் கலந்துகொள்ளலாம். முடிவில் பங்கேற்பாளர்களுக்கு ”வண்டலூர் உயிரியல் பூங்கா தூதுவர்” என்ற சான்றிதழ், பேட்ஜ் வழங்கப்படும். மேலும் 10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்துசெல்ல இலவச கடவுச்சீட்டும் வழங்கப்படும். வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக இருப்பதோடு உயிரியல் பூங்காவை மேம்படுத்து வதிலும் விலங்குகளை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுவார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க www.aazp.in/summercamp2025 என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உயிரியல் பூங்கா தூதுவர் திட்டம்: வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.