தேனி : தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் இறுதி வாரம் எட்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் தேனி மாவட்டமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை விழாவில் கலந்து கொள்வர்.
கோயிலுக்கு அருகே உள்ள முல்லையாற்றில் உள்ள தடுப்பணைக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் சென்று குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெரியாறு அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 100 கனஅடி நீர்திறந்து விடப்பட்டுள்ளதால் வீரபாண்டி முல்லையாற்றில் தண்ணீர் ஓரளவு பரந்து விரிந்து செல்கிறது.
இதில் வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணையில் தண்ணீர் பாய்ந்தோடுவது பக்தர்களை ஆற்றில் குளிக்க ஆர்வமூட்டுவதாக உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஏராளமானோர் தடுப்பணைக்கு சென்று குளித்து வருகின்றனர்.
இந்நிலையில், போடி அருகே ரெங்கநாதபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமார் மகனான வெற்றிவேல்வாசன்(10) என்ற சிறுவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தடுப்பணைக்கு குளிக்க சென்ற இடத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமான பலியானார்.
ஓடைப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகள் ரூபிகாஸ்ரீ (15) என்ற சிறுமி நேற்று தடுப்பணைக்கு சென்றபோது, தண்ணீரில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இவரை அப்பகுதியில் பாதுகாப்பிற்கு இருந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று சிறுமி ரூபிகாஸ்ரீயை காப்பாற்றி, வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
திருவிழாவையொட்டி தடுப்பணைக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, திருவிழா முடியும் வரை தடுப்பணை பகுதியில் விபத்து ஏற்படுதை தவிர்க்கும் வகையில் நேற்று வீரபாண்டி பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வினைத்தொடர்ந்து, வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணைக்கு செல்லும் வழியில் சுமார் 50 மீட்டர் முன்னதாகவே போலீஸ் மூலம் கயிறு மற்றும் பேரிகார்டு மூலம் தடுப்பு அமைத்து பொதுமக்களை தடுப்பணைக்கு செல்வதை தடுப்பது எனவும், தடுப்பணைக்கு முன்பாக சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு முன்பாக உள்ள ஆற்றில் குளிக்க அனுமதி அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க போலீஸ் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பணை அருகே தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கவும் முடிவு செய்துள்ளது.
The post உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முல்லையாற்று தடுப்பணைக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.