லாஸ் ஏஞ்சல்ஸ்: சாலைகளின் இரு பக்கங்களிலும் கொழுந்துவிட்டு எரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகைத் தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள்… இதுவே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக் கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.
அதிக சக்திவாய்ந்த சாண்டா அனா காற்றினால் உந்தப்பட்டு உண்டான காட்டுத் தீ, மாநகரின் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகளை நாசமாக்கிவிட்டன. அழகிய புல்வெளிகள் எல்லாம் புகையைப் பரப்பிக்கொண்டிருக்கும் சாம்பல் மேடுகளாக மாறியுள்ளன. ஹாலிவுட் படங்களால் பிரபலப்படுத்தப்பட்ட இடங்களை நாசம் செய்துள்ளது காட்டுத் தீ. நவீன லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் மிகவும் மோசமான அழிவு இது என்று குறிப்பிடப்படுகிறது. புகைக் கூண்டுகளாய், இரும்பு மாடிப்படிகளாய் மட்டுமே எஞ்சி தீக்கு தன்னைத் தின்னக்கொடுத்துக் கொண்டிருக்கும் வீடுகளை கைவிட்ட படி, தாங்கள் மட்டும் தப்பித்து வந்த பயங்கரக் கதைகளை பேசித் தீர்க்கிறார்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசிகள்.