பொன்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயில் அருகே துறவிகள் மற்றும் ஆதரவற்ற பலர் தங்கி உள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் ஒரு மூதாட்டியை யாரோ சிலர் கொண்டு வந்து விட்டுச்சென்றனர். அந்த மூதாட்டிக்கு பார்வை குறைபாடு உள்ளதாக தெரிகிறது. அவர் கோயில் அருகே சிரமத்துடன் நடந்து சென்றார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர்களிடம் தான் ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி (80) என கூறினார். `பல ஆண்டுகளாக ஊர் மக்களுக்கு குறிசொல்லி வந்தேன். எனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு வாரிசு யாரும் இல்லை. இதனால் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்.
ஆனால் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன், வாலாஜா முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். தற்போது அந்த முதியோர் இல்லம் மூடப்பட்டதால் அடைக்கலம் தேடி மீண்டும் உறவினர்களை நாடிச்சென்றேன். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து வள்ளிமலை கோயில் வாசலில் விட்டுச்சென்றனர்’ என வேதனையுடன் கூறினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல மாவட்டம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதியோர்களை பராமரிக்காமல் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வள்ளிமலை கோயில் அருகே விட்டுச்செல்வது தொடர்கதையாகி வருகிறது.
எனவே இவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறுவிட்டு செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மேல்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post உறவினர்கள் கைவிட்டதால் வள்ளிமலை கோயில் வாசலில் 80 வயது மூதாட்டி தவிப்பு appeared first on Dinakaran.