பிரேசில்: லத்தீன் அமெரிக்கா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்னிவல் எனப்படும் கேளிக்கை விழா உச்சகட்ட குதூகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரேசிலின் அமேஸான் நகரில் காளைகளை போல் வேடமணிந்தவர்கள் தெருக்களில் வாத்தியங்களை இசைத்தப்படியும், நடமாடியபடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரில் தொடங்கிய கார்னிவல் திருவிழா ஆண்டுக்கு ஆண்டு உற்சாகம் குறையாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிரீஸ் நாட்டில் கேலக்ஸிடி நகரில் வண்ண பொடிகளை தூவியும், மாவை உடலில் பூசி கொண்டும், வெண்கல மணிகளை தங்களது உடலில் கட்டி கொண்டும் பொதுமக்கள் நடமாடினர். அழுக்கான உடைகளை உடுத்தி கொண்டு தங்களை அழுக்காகி கொண்டு திறந்த இதயத்துடன் தங்களது கேளிக்கை விழாவை கிரீஸ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ஃப் நகரில் நடைபெற்ற கார்னிவலில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை கிண்டல் செய்து ஜெர்மனிய மக்கள் பேரணி நடத்தினர். அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து உக்ரைனை நசுக்கி பிழிவது போன்றும் மொத்த உலகத்தின் பொருளாதாரத்தையும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இணைந்து நசுக்குவது போன்றும் சித்தரித்து பேரணி நடத்தினர்.
ஒருபுறம் டிரம்பை கேலி செய்து கார்னிவல் கொண்டாடப்பட்ட அதேநேரத்தில் குரோஷியாவின் மூன்றாவது பெரிய நகரமான ரிஜேக்கா நகரில் டிரம்ப், நெதன்யாகு போன்று வேடமணிந்து ஏராளமானோர் ஊர்வலமாக நடமாடியபடி சென்ற கார்னிவல் பலரையும் ஈர்த்தது. இந்த விழாவை காண பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். குரோஷியாவின் மட்டும் 109 கார்னிவல் குழுக்கள் உள்ளன. அவற்றில் பயிற்சி பெற்ற 11,000 கலைஞர்கள் உள்ளனர்.
The post உலகம் முழுவதும் உச்சக்கட்ட குதூகலத்துடன் நடைபெறும் கார்னிவல்: ஜெர்மனியில் டிரம்ப், புதின், ஜின்பிங்கை கேலி செய்து பேரணி நடத்திய பொதுமக்கள் appeared first on Dinakaran.