பாஸ்டன்: உலகம் முழுவதும் 5 கோடி பேர் பார்த்த சிஇஓ-வின் சில்மிஷம் தொடர்பான வீடியோவை எடுத்த ரசிகை தனது விளக்கத்தை கொடுத்து உள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியின்போது, ‘கிஸ் கேம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அங்கு வந்திருந்த அஸ்ட்ரோனோமர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி பைரன், அதே நிறுவனத்தைச் சேர்ந்த மனிதவளத் துறை (ஹெச்ஆர்) தலைவரான கிறிஸ்டின் கபோட்டை முத்தமிட்டுள்ளார். இதனை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த கிரேஸ் ஸ்பிரிங்கர் என்ற ரசிகை தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, ‘கிஸ் கேமிற்கு கிடைத்த சுவாரஸ்யமான எதிர்வினை’ என்று நினைத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
அந்த வீடியோ பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது. இதுவரை சுமார் 5 கோடி பார்வைகளைப் பெற்று, உலகளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வீடியோவைப் பதிவு செய்த ரசிகை கிரேஸ், ‘தவறான விளையாட்டை விளையாடினால், முட்டாள்தனமான பரிசுகள்தான் கிடைக்கும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியதற்கு வருந்துகிறேன். ஆனாலும், அவர்கள் செய்தது தவறு’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவால், இருவரின் உறவுமுறை குறித்த பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளதுடன், அவர்களின் தனிப்பட்ட விஷயம் பொதுவெளியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post உலகம் முழுவதும் 5 கோடி பேர் பார்த்த சிஇஓ-வின் சில்மிஷம்: வீடியோ எடுத்த ரசிகை விளக்கம் appeared first on Dinakaran.