புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கிவைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது அவர், “'அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' இதுவே எனது அரசின் மந்திரம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தோம். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு நிர்ணயக் குழுவில் இருந்த அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.