பெங்களூரு: வளமான பாரம்பரியம் கொண்ட தொன்மையான கலாச்சாரம் என்பதால், உலகில் சுமுக சூழலை உருவாக்கும் அனுபவ ஞானம் இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "மனித குல ஒற்றுமை, அனைவருக்கும் நல வாழ்வு எனும் லட்சியத்தை நோக்கி பன்னெடுங்காலமாக ஹிந்து சமுதாயம் மிக நீண்ட, பிரமிப்பூட்டும் பயணத்தில் முனைந்துள்ளது. எத்தனையோ கொந்தளிப்புகளுக்கு மத்தியில், துறவிகள், ஞானிகள், பல புகழ்பெற்ற மாதரசிகள் உள்பட சான்றோர்களின் ஆசியாலும் முயற்சியாலும் நமது தேசம் தொடர்ந்து முன்னேற முடிந்தது.
காலங்காலமாக நமது தேசத்தில் பரவியிருந்த பலவீனங்களை ஒழிக்கவும், ஒருங்கிணைந்த, நற்குணமுள்ள, சக்திவாய்ந்த தேசமாக பாரதத்தை உருவாக்கி, உலகின் தலைசிறந்த நாடாக்கவும் 1925 ல் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை துவக்கினார். மனித நிர்மாணம் எனும் சங்கத்தின் முக்கிய பணி நிறைவேற தினசரி ஷாகா வடிவில் தனித்துவமான முறையை ஏற்படுத்தினார். தேசத்தின் தொன்மையான பாரம்பரியத்துக்கு, பண்பாட்டுக்கு இசைவான தேச நிர்மாணம் எனும் தன்னலமற்ற தவமாக அது உருவெடுத்தது. அவரது வாழ்நாளிலேயே இந்த முன்னெடுப்பு நாடு முழுதும் பரவியது.