ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை அனுமதிப்பது தொடர் பாக இப்போதிருக்கும் நிலையையே 2015 ஜூன் வரையில் தொடர்வது என்று அணு ஆயுதம் வைத்துள்ள ஐந்து பெரிய வல்லரசுகளும் ஜெர்மனியும் சேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. ஈரானுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இப்போதைக்கு நம்பிக்கை யூட்டும் நடவடிக்கை இது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் ஐ.எஸ். படைகளின் ஆதிக்கமும் தொடரும் இந்தச் சமயத்தில், ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் பெரிய நாடான ஈரானிலும் அமைதியற்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்பது விவேகமான முடிவுதான்.
அணு ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுகளையோ நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக் கூடாது, கைவசம் அதிக அளவு புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்றவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது, அணுசக்தி நிலையங்களைச் சர்வதேசக் கண்காணிப்புக்கு எப்போது கேட்டாலும் திறந்துவிட வேண்டும் என்றெல்லாம் முன்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஈரானின் புதிய அதிபராக 2013-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஸன் ரூஹானி அவற்றை ஏற்றுக்கொண்டதால், கடுமையான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டன. ஆனால், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. பேச்சை முறிப்பதோ தடைகளை மீண்டும் விதிப்பதோ எதிர்பார்ப்பதைவிட மோசமான விளைவுகளையே தரும். அத்துடன் சர்வதேசக் கண்டனங்களை மீறி ஈரான் அணு ஆயுதம் தயாரித்துவிடும் என்று நம்புவதற்கும் இப்போதைக்கு இடமில்லை.
அணுசக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள இறையாண்மை மிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை இருக்கிறது. அதனால், ‘தங்களுடைய அணு நிலையங்களைச் சர்வதேசக் கண் காணிப்புக்கு ஏன் திறந்துவிட வேண்டும்?’ என்று ஈரான் மறுத்தது. அதன் காரணமாகத்தான் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அமைதியான பணிகளுக்கு அணுசக்தியைப் பயன் படுத்திக்கொள்ள ஈரானுக்குள்ள உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்ததால்தான் பிரச்சினையே. இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராகப் பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றியது அமெரிக்கா.
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அதன் அடிப்படையில் அணுசக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் ஈரானுக்கு உரிமை இருக்கிறது என்பதை ஒபாமா நிர்வாகம் தற்போது ஏற்றுக்கொண்டிருப்பது பெரும் மாறுதல். ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல், இன்னமும் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள்குறித்து சந்தேகத்துடன்தான் பார்க்கிறது. ‘அவை யெல்லாம் ஆயுதங்கள் தயாரிக்கத்தான், அதற்காக அந்த நிலையங் களை எப்போது வேண்டுமானாலும் தாக்குவோம்’ என்று இஸ்ரேல் கூறிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு ஒரு பிரதேசத்தில் ஊடுருவலையோ போரையோ நிகழ்த்த ஏதாவது ஒரு காரணம் எப்போதும் தேவையாக இருந்துகொண்டிருக்கிறது. முன்பு இராக்; தற்போது ஈரான். இராக்கில் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பது வெளிப்பட்ட பிறகும், இராக் மீதான தனது போர்குறித்து அமெரிக் காவுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. தற்போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பசிக்கு ஈரான் கிடைத்திருக்கிறது.
புவியரசியல் விளையாட்டுக்களில் அமெரிக்கா மட்டுமே எதற்கும் கட்டுப்படாமல் விளையாடிக்கொண்டிருக்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. உலக அமைதிக்கு அதுதான் பேராபத்து, ஈரான் தயாரிப்பதாகச் சொல்லப்படும் அணுஆயுதங்களைவிட!
தி இந்து