சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சென்னை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். நவீன நர்சிங் துறையின் நிறுவனரான பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்ததினத்தை நினைவு கூரும் வகையிலும், உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் அர்ப்பணிப்பான சேவையை கவுரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருபொருளில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு, “செவிலியர்களை பராமரிப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சாந்தாராம் தலைமையில் நேற்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, ஏராளமான செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, மருத்துவமனை உள்ளேயே பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், மருத்துவமனை மருத்துவ நிலைய அதிகாரிகள் அறவாழி, உமாபதி மற்றும் உதவி மருத்துவ நிலைய அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே போல, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் லட்சுமி தலைமை தாங்கினார். தொடர்ந்து, பணியில் எந்தவித பாரபட்சமும் பார்க்க மாட்டோம், நேர்மையாக பணியாற்றுவோம் என நர்சுகள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர், மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய நர்சுகளுக்கு இயக்குனர் டாக்டர் லட்சுமி, பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், நர்சுகள் ஒருவருக்கொருவர் செவிலியர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதே போல, சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் உலக செவிலியர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்களின் நல்வாழ்வுக்காக இரவு-பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் நர்சுகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
The post உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி appeared first on Dinakaran.