வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்ற உடனே சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றம், தெற்கு எல்லையை மூடுவது,எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதில் உள்ள தடைகளை அகற்றுவது உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்(78) வெற்றி பெற்றார்.
அவர் இன்று( 20ம் தேதி) வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்ட விழாவில் நாட்டின் 47 வது அதிபராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா வாஷிங்டன் நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு( இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) கேப்பிடல் கட்டிடத்தில் நடக்கிறது. பதவியேற்பு விழாவுக்காக நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து மனைவி மெலனியாவுடன் டிரம்ப் ராணுவ விமானத்தில் வாஷிங்டன் வந்து சேர்ந்தார். அவரது பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சார்பில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.பதவியேற்பு விழாவில் உலகின் முன்னணி தொழில் அதிபர்களான எலான் மஸ்க், மார்க் ஸக்கர்பெர்க், ஜெப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வாஷிங்டனில் மைனஸ் 11 டிகிரி குளிர் நிலவுவதால் பதவியேற்பு விழாநாடாளுமன்றத்தின் திறந்தவெளியில் நடத்தப்படாமல் உட்புறத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவியேற்பு விழா மூடிய திடலுக்குள் நடத்தப்படவுள்ளது. டிரம்ப் பதவியேற்பு விழாவை மைதானத்திற்குள் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வாஷிங்டனில் நடக்கும் பதவியேற்பு விழா முடிந்த உடன், தனது அதிகாரபூர்வ அதிபர் பணியை டிரம்ப் தொடங்குவார்.
முதல் நாளான இன்று தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட உள்ளார். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை. ஆனால், எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து மிக கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என டிரம்பின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிரம்பின் நெருக்கமானவரான ஸ்டீபன் மில்லர் கூறுகையில்,‘‘ நாட்டின் தெற்கு எல்லையை மூடுவது,சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுவது, பெண்கள் பிரிவுக்கான விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடுப்பது,எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, அரசின் நிர்வாக திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்ட உத்தரவுகள் இருக்கும்’’ என்றார்.
மேலும், அதிபர் ஜோ பைடன் அரசு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் முடிவு செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கேபிடல் ஹில்லில் நடந்த கலவரத்தின் போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்குகளை டிரம்ப் ரத்து செய்ய உள்ளார்.
அமெரிக்கா முதலில்(அமெரிக்கா பர்ஸ்ட்) என்ற கொள்கையின்படி கால நிலை மாற்றம் என்கிற கருத்தை நிராகரித்தல், பணக்காரர்களுக்கான வரியை குறைத்தல், வெளிநாட்டு பொருள்கள் மீது புதிய வரி விதித்தல்,புதை படிவ பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், எண்ணெய், எரிவாயுவை எடுக்க பூமியை துளையிடுவதை தடை செய்யும் பைடனின் நிர்வாக உத்தரவை நீக்குதல் போன்ற முக்கிய முடிவுகளை டிரம்பின் பொருளாதார குழு எடுக்க உள்ளது.
* வரலாறு காணாத பாதுகாப்பு
டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அந்த நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
* பதவியேற்பு விழாவுக்கு ரூ.1731 கோடி நன்கொடை
டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், மெட்டாவின் மார்க் ஸக்கர்பெர்க், அமேசானின் ஜெப் பெசோஸ் வாரி வாரி வழங்கியுள்ளனர். இதற்கு நன்கொடையாக ரூ.1731.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
* சீனா, இந்தியாவுக்கு சுற்றுபயணம்
அதிபராக பதவியேற்றவுடன் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் முயற்சிப்பார் என தெரிகிறது. மேலும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனக்கு நெருக்கமான ஆலோசகர்களிடம் சீனாவுக்கு சுற்றுபயணம் செய்து அந்த நாட்டுடன் உறவை வலுப்படுத்த முயற்சிப்பது குறித்து பேசியுள்ளார். அதே போல் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
* டிரம்புக்கு எதிராக போராட்டம்
டிரம்ப் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து பல்வேறு அமைப்பினை சேர்ந்த பெண்கள் ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்திற்கு அருகில் போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவன அதிபர் எலன் மஸ்க் உள்ளிட்டோரை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடக்க உள்ளது.
The post உலக தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்பு: முதல்நாளிலேயே 100 உத்தரவுகளில் கையெழுத்து appeared first on Dinakaran.