வாஷிங்டன்: ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான உலக பணக்காரர்களின் பட்டியலை நேற்று 39வது ஆண்டாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் 3,000க்கும் (3,028) அதிகமானோர் இடம்பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் இந்த பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் எலான் மஸ்க் 342 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் இவரின் சொத்து மதிப்பில் 147 பில்லியன் டாலர்கள் சேர்ந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
எலான் மஸ்குக்கு அடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் (216 பில்லியன் டாலர்) இடம்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசாஸ் (215 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும், ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசன் (192 பில்லியன் டாலர்) நான்காம் இடமும் பிடித்துள்ளனர். 5வது இடத்தில் ஃபேஷன் பொருட்களை தயாரிக்கும் எல்விஎம்எச் ( LVMH ) நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் (178 பில்லியன் டாலர்) உள்ளார்.பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் இந்த பட்டியலில் 6ஆம் இடம்பிடித்துள்ளார். டாப் 10 பட்டியலில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். முதல் 10 இடங்களைப் பிடித்த உலக பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்கர்கள் 8 பேரும், பிரான்ஸ் நாட்டினர் 1 நபரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டை ஒப்பீடு செய்து பார்க்கையில், இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 902 பில்லினியர்களும், சீனாவில் 516 பில்லினியர்களும் இந்தியாவில் 205 பில்லியனியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் டாப் 20-இல் இடம்பிடித்த ஒரே பணக்காரர் முகேஷ் அம்பானி (18வது இடம்) ஆவார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகத் திகழும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.2 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்ததாக கௌதம் அதானி 28 வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 56.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மறுபுறம், ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 406 பெண்களும் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்கார பெண்களின் பட்டியலில் அலைஸ் வால்டன் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு டாலர் 101 பில்லியன் என கூறப்படுகிறது.
The post உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம்: இந்தியா 3வது இடம் appeared first on Dinakaran.