ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஸ்கூல்’. இதில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, பகவதி பெருமாள், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ஸ்கூல்’ பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி வித்யாதரன் கூறும்போது, “இது உளவியல் ரீதியான த்ரில்லர் கதையைக் கொண்ட படம். இன்றைய பள்ளி மாணவ- மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான க்ரைம் சம்பவங்களைப் பற்றி அலசும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம். இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம். மே 23-ம் தேதி வெளியாகிறது. படத்துக்குக் கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்” என்றார். இயக்குநர் ஆர்.கே வித்யாதரன் ஏற்கெனவே உபேந்திரா, ரேணுகா மேனன், ரீமாசென் நடித்த ‘நியூஸ்’ என்ற படத்தை கன்னடத்தில் இயக்கியவர்.