உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், தை கிருத்திகை உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் கோயிலை சுற்றி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் உள்ளது.
தற்போது இந்தக் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்து அடிக்கடி இடிந்து விழுந்து வருகிறது. கோயிலுக்கு மிக அருகில் இந்த கட்டிடங்கள் உள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்தோடு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மேலும் இந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 17 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் கோயில் முன்புறம் உள்ள மண்டபம் உள்ளிட்ட சுற்றுச்சுவர் விரிசல் விட்டு பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் உள்ளது. இதனால் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
வைக்கின்றனர்.
இது குறித்து சாமி அலங்கார கலைஞர் கோதண்டபாணி,பழமையான சுப்பிரமணியசாமி கோயில் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது. குறுகிய இடத்தில் கோயில் உள்ளதால் அதிகமான பக்தர்கள் வரும்போது கூட்டம் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அபிஷேகம் செய்யும் தண்ணீர் வெளியே செல்லாமல் கோயிலுக்குள் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
மழை காலங்களில் சாலையில் உள்ள மழை தண்ணீர் கோயிலுக்குள் வந்த குளம் போல் தேங்கி நிற்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் அந்தப் பணிகளும் இதுவரையில் நடைபெறாதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
பழமையான இந்த கோயிலை வரைந்து புதுப்பித்து கும்பாபிஷேக பணிகள் நடைபெற வேண்டும் என்றும், கோயிலை சுற்றி உள்ள ஆபத்தான இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தி கோயிலை விரிவு படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.
The post உளுந்தூர்பேட்டையில் கோயிலை சுற்றி உள்ள பழமையான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் appeared first on Dinakaran.