உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் பகுதியில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென 20 கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்டது களமருதூர் கிராமம். சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளது. களமருதூர் மற்றும் இதை ஒட்டிய பிள்ளையார்குப்பம், ஆத்தூர், கோட்டையம்பாளையம், கூவாகம், டி.ஒரத்தூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப பிரச்சனை, நிலத் தகராறு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக திருநாவலூர் காவல் நிலையம் சென்று வருகின்றனர். அங்கு சென்று வர ஒருநாள் ஆவதாலும், பிரச்சனைகளை உடனே தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதாலும் களமருதூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி களமருதூர் கிராமத்தை கடந்து கிளியூர், எம்.குன்னத்தூர், தாமஸ், சீக்கம்பட்டு, எ.அத்திப்பாக்கம் உள்ளிட்ட அதை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்பவர்களும் திருநாவலூர் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் திருநாவலூர் காவல் நிலையம் செல்ல சுமார் 35 கிமீட்டருக்கு மேல் ஆவதால் தொடர்ந்து சிரமமடைந்து வருகின்றனர். களமருதூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறக்க வேண்டுமென கடந்த அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் அப்போது களமருதூர் கிராமத்தில் தற்காலிக காவல் மையம் திறக்கப்பட்டது. அதுவும் சில மாதங்களிலேயே செயல்படாமல் மூடப்பட்டது. அதிகளவில் குற்ற சம்பவங்களை தடுக்க களமருதூர் கிராமத்தில் மீண்டும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டுமென்ற கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் சட்டமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கை வைத்து பேசி வருகிறார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பழனிவேல் கூறும்போது, களமருதூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறந்தால் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள், விவசாயிகள் தேவையின்றி அலைக்கழிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் தகராறுகள் ஏற்படும்போது உடனே காவல் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் அதிகளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் களமருதூர் மற்றும் பிள்ளையார்குப்பம் கடைவீதி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடைபெற்று வருவதை தடுக்க முடியவில்லை. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்படும்போது அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் வருவதற்கு நீண்டநேரம் ஆவதால் பிரச்சனை அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க களமருதூர் பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்க வேண்டுமென கூறினார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எடைக்கல் புறக்காவல் நிலையம் அப்போதைய திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. அதன்பிறகு காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு இதுவரையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் எந்தவொரு காவல் நிலையங்களும் திறக்கப்படவில்லை. அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க களமருதூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறக்க வேண்டுமென 30க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்படும்போது அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் வருவதற்கு நீண்டநேரம் ஆவதால் பிரச்சனை அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
The post உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் பகுதியில் புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?.. 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.