மதுரை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2021ம் ஆண்டு 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வார்டு நிர்ணயம் மற்றும் ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டுகளில் மக்கள் தொகை பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு (ரிசர்வேஷன்) தொடர்பாக முடிவு செய்யப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் வாக்காளர் பட்டியலில், பாதி வாக்காளர்களின் புகைப்படம் இல்லாமல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருப்பதை உறுதிப்படுத்துவதோடு, வார்டு (ரிசர்வேஷன்) ஒதுக்கீட்டையும் முடிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி காலியிடத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மதி, ஆர்.விஜயகுமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2024ம் ஆண்டு நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்தது தொடர்பான வழக்கின் உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்வதோடு, வார்டுகள் ஒதுக்கீடு குறித்த முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான காலியிட பட்டியலை வெளியிட வேண்டும்’’ என கூறி 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி காலியிடத்திற்கான இடைத்தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.