நெல்லை: உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் முக்கிய சாட்சியான ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த லாரி டிரைவருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரை கடந்த 2016 மார்ச் 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ராஜன், அருள்பிலிப் உட்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்து பாளை. தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை முயற்சி வழக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் (47) முக்கிய சாட்சியாக இருந்தார். வைகுண்டம் கோர்ட்டில் சாட்சி சொன்னால் தண்டனை உறுதி என்பதால் அச்சம் அடைந்த ராஜன் தரப்பினர் சமரச முயற்சி மேற்கொண்டனர்.
அதை அவர் ஏற்கவில்லை. இதனால் கடந்த 2022 மார்ச் 10ம் தேதி பாளையங்கால் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த வைகுண்டத்தை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த ராஜன் (70), அவரது மகன் லாரி டிரைவர் செல்வராஜ் உட்பட 8 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, ராஜன், அவரது மகன்கள் செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் (எ) பிரபாகரன் (40), தேவதாஸ் மகன்கள் பிலிப் (எ) அருள் பிலிப் ராஜ், அண்டோ நல்லையா (28) மற்றும் பாபு அலெக்சாண்டர் (41), ராஜன் மனைவி செல்வலீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (59) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கை நெல்லை மாவட்ட 2 வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து, செல்வராஜ் உள்பட 8 பேரும் குற்றவாளிகள் என கடந்த 3ம் தேதி அறிவித்தார். குற்றவாளிகளின் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் செல்வராஜூக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன், அருள் பிலிப், அண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகிய 3 பேருக்கு 2 மாதம் சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
The post உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் கொலை முயற்சி முக்கிய சாட்சியை கொன்ற லாரி டிரைவருக்கு தூக்கு: 4 பேருக்கு ஆயுள் நெல்லை கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.