சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கே.பி.முனுசாமி பேசுகையில், “தமிழ்மொழியில் அழிந்துவரும் நிலையிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் இருபதாம் நூற்றாண்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை தமிழகம் முழுவதும் அலைந்து, கண்டுபிடித்து, அதேபோல, எழுத்துப் பிரதிகளையும் கண்டுபிடித்து, 90 நூல்களுக்கு மேலாக பதிப்பகம் செய்தார். இன்றைக்கு நாம் வாசிப்பதற்குரிய புதிய இலக்கியத்தை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் கொண்டு வந்திருக்கிறார்.
அவரைப் போற்றுகின்ற விதமாக, அவருடைய பிறந்த நாளில் அதாவது, பிப்ரவரி 19ம் நாளில் இலக்கியத்தினுடைய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்கப்படுமா என்று கோரியிருக்கின்றார். முதல்வரோடு கலந்து பேசி, வருங்காலத்தில் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
கே.பி.முனுசாமி: உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாளை, முதல்வரிடத்தில் நான் கோரிக்கையாக வைக்கிறேன், மீண்டும் அவருடைய பிறந்த நாளை இலக்கியத்தினுடைய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பார்களா? ஏனென்று சொன்னால், தமிழுக்காக இருக்கின்ற இயக்கம் திராவிட இயக்கம். அந்தத் திராவிட இயக்கத்திலே இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய திருப்பெயரிலே விருதை அறிவித்திருக்கிறார். இந்த இயக்கம் இதை அறிவிக்குமா என்றார்?.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பற்றி உறுப்பினர் தெரிவித்த முழு கருத்துகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில், எந்த மாற்று கருத்துமில்லை. முதல்வருடைய வழிகாட்டுதோடு நிச்சயமாக இந்தத் துறையின் சார்பில் அவருக்கு மரியாதை செய்கின்ற வகையிலே, வருங்காலத்தில் அதுகுறித்து அரசு பரிசீலிக்கும். அதே நேரத்தில், ஆண்டுதோறும் அவருக்கு மாநில விழாவாக, அரசு விழாவாக, அவருடைய பிறந்த நாளை நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.
சென்னை, கடற்கரை சாலையிலுள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம். உறுப்பினர் சொன்னதைப்போல, அவருடைய பெயரிலே தமிழ்ப் புலவர்களுக்கு விருது வழங்குகிறோம். அதேபோல, அவருடைய பிறந்த ஊரான உத்தமனாதபுரத்தில் உள்ள அவருடைய வீடு இன்றைக்கு சிறப்பாக அரசின் சார்பில் பராமரிக்கப்படுகிறது. உறுப்பினர் பல்வேறு தகவல்களை இங்கே சொல்லியிருக்கின்றார். அவை முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துகள்தான். முதல்வாரோடு கலந்து பேசி, எதிர்காலத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் கே.பி.முனுசாமி இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சரும் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். முதல்வரும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும். அதேநேரத்தில், இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
The post உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.