ர ஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டும், பின்னர் அந்த ஆவணங்கள் திருடப்படவில்லை; நகலெடுக்கப்பட்டன என்று அவர் தரப்பில் தரப்பட்ட விளக்கமும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது அரசுத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையும் இதற்கு முன்னர் இந்தியா கண்டிராதது.
ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப் பதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதில் முறைகேடு நடக்கவில்லை என்று கடந்த டிசம்பரில் தீர்ப்பளித் திருந்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட மனுக் களின் மீதான விசாரணையின்போதுதான் அரசுத் தலைமை வழக்கறிஞர் இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறார். மேலும், இந்த ஆவணங்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்ட ‘தி இந்து’ மற்றும் ஏஎன்ஐ ஆகிய ஊடகங்கள் மீது, 1923-ல் இயற்றப்பட்ட அரசு ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குற்றவழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. பாதுகாப்புத் துறை தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டதாக, அரசுத் தலைமை வழக்கறிஞரே நீதிமன்றத்தில் சொன்னதாக வெளியான தகவல்கள் பெரும் புயலைக் கிளப்பியிருந்த நிலையில், ‘அவை திருடப்படவில்லை; நகலெடுக்கப்பட்டன’ என்று அவர் விளக்கமளித்திருக்கிறார்.
அரசு ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தை இதுவரை ஆண்ட மத்திய அரசுகள் ஊடகங்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதில்லை. வேண்டும் என்றே அரசு பற்றிய ரகசியத் தகவல்களைத் தேடிச்சென்று சேகரிப் பதும், ஆவணங்களை வைத்திருப்பதும்தான் சட்டப்படி குற்றம். ‘இந்தச் சட்டம் தொடர்பான வாக்கிய அமைப்பு மிகவும் கவனத்துடன் பார்க்கப்பட வேண்டும்’ என்று சட்ட ஆணையம் தனது 1971 அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வதற்கும் – எதிரிக்கு உதவுவதற்கும், நாட்டுமக்களின் நலன் கருதி வெளி யிடப்படும் ரகசியத் தகவல்களுக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.
ஆவணங்களில் உள்ளவற்றை அப்படியே பிரசுரித்ததும், அது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டதும் பத்திரிகைச் சுதந்திரத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளே. “ஆவணங்கள் எப்படிப் பெறப் பட்டன என்பது முக்கியமில்லை, விசாரணைக்கு உரியதா என்பதைத் தான் பார்க்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ஜனநாயகத்தின் அடிநாதமான விஷயமே தகவல்களை அறிவது தான் என்று போற்றப்படும் காலம் இது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதே அந்த நோக்கில்தான். அரசு ரகசியப் பாது காப்புச் சட்டம், தகவல் அறியும் சட்ட வரம்பில் குறுக்கிட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் அதன் கூறு 8(2) வரையப்பட்டிருக்கிறது. எனவே, தனக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதற்காகச் சில உண்மை களை ஊடகங்கள் வெளியிடாமல் தடுக்க, ரகசிய காப்புச் சட்டத்தை அரசு பயன்படுத்த முனையக் கூடாது. பொதுவெளியில் வெளியான தகவல்கள், அதையொட்டி எழும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்வதே அரசுக்குப் பெருமையைத் தரும்!