* 14 ஒன்றிய, தனியார் பல்கலை. துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்பு
* சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி அதிருப்தி
ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை 35 துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். அரசு பல்கலைக்கழக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றதால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சியடைந்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற துணை ஜனாதிபதி கடும் அதிருப்தியடைந்தார்.
பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதேபோல், கல்வித்துறையில் பல குழப்பங்களை ஆளுநர் விளைவித்து வந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசு சார்பில் பல்கலை வேந்தராக மாநில முதல்வர் இருப்பார் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால் உச்ச நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் மாநில முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வரே வேந்தராக இருப்பார் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் ஒன்றிய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதன் பின், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் ஏப்.25, 26 ஆகிய இரு நாட்கள் தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்றும், சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கலந்து கொள்வார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, துணை வேந்தர்கள் மாநாடு முன் கூட்டியே திட்டமிட்டது. மாநில அரசுடன் மோதல் போக்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தது. இருப்பினும், ஆளுநர் கூட்டி உள்ள கூட்டத்துக்கு துணை வேந்தர்கள் பங்கேற்றால் அவர்களை முதல்வரே பணி நீக்கம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த பரபரப்பான நிலையில் ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணைவேந்தர்கள் அனைவரும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு சென்றார். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார்.
அங்கு அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்.பி. ராசா, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, காவல்துறை கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து துணை ஜனாதிபதி கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்தார். இதையடுத்து மாநாடு நேற்று பிற்பகல் 12 மணியளவில் துவங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு அரசு, தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணைவேந்தர்கள் 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 35 துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். சில பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். அதன்படி மொத்தம் 33 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களை சேர்ந்த எந்த துணைவேந்தர்களும் கலந்து கொள்ளவில்லை. இரு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மட்டும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் இந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால் ஆளுநர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். துணை வேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும் அதிருப்தியடைந்தார்.
* இறுக்கத்துடன் காணப்பட்ட ஆளுநர்
மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. சில தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பதிலாக அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனால் மாநாடு துவங்கியது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி இறுக்கத்துடன் காணப்பட்டார். கோபம், கொப்பளிக்கும் வார்த்தைகளை அவர் வெளிப்படுத்தினார்.
* தேசிய கல்விக் கொள்கை அரசின் கொள்கை இல்லை; துணை ஜனாதிபதி பேச்சு
ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் துவக்கி வைத்து பேசியதாவது: உலகமே ஒரு குடும்பமாக உள்ளது. இந்திய பிரதமர் மோடியின் தலைமை பண்பு நமது நாட்டிற்கு உத்தரவாதமாக அமைந்துள்ளது. தேசிய நலனே முதன்மையானது. எப்போதும் தேசத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். தேசத்தை கட்டமைப்பது கல்வியே, ஒரு சமூகத்தை மாற்றும் வல்லமை கல்விக்கு மட்டுமே உண்டு. நாட்டில் 50 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன. காஞ்சிபுரம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது. மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857ல் இருந்து சிறந்து செயல்பட்டு வருகிறது. நமது கல்வியை மேம்படுத்த வேண்டும். குருகுலம் என்ற சிறந்த கல்வி அமைப்பை நாம் கொண்டிருந்தோம். அதன் மூலம் சமூகத்திற்கு சேவையாற்றி வந்தோம். நாட்டில் 11 செம்மொழிகள் உள்ளன. இவை நமது கலாசாரம், பண்பாடு, கல்வியை பறை சாற்றுகின்றன. கல்வி முக்கியம் என்பதால், நாம் கல்வியில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
இது குறித்து பல எண்ணங்கள் உள்ளன. அவற்றை நாம் நடைமுறைப்படுத்துவதால், நமது நாடு உலகளவில் வல்லசரசாக மாறி வருகிறது. கல்வியில் நாம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மேற்கத்திய மற்றும் காலனி ஆதிக்கத்தைவிட்டு நமது பாரம்பரிய கல்வியை இன்றைய இளைய சமூதாயத்திற்கு கொண்டுசெல்ல முன் வரவேண்டும். தேசிய கல்விக் கொள்கை தேசிய நலனுக்கானது. தேசிய கல்விக் கொள்கை என்பது ஒன்றிய அரசின் கல்வி கொள்கை அல்ல. இது நாட்டிற்கான கல்விக் கொள்கை.
இந்த கல்வி கொள்கை நமது நாகரிகத்தின் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகிறது. இது இந்திய மொழிகளுக்கு முதன்மை அளிக்கிறது. இது மாணவர்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறது. மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட உயர் கல்வியை தங்கள் தாய்மொழியில் படிக்க இந்த புதிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும். துணை வேந்தர்கள் புதிய கல்விக் கொள்கையை ஆழமாக ஆராய்ந்து படித்து அறிந்து அதனை செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* காவல்துறை மூலம் மிரட்டல்; ஆளுநர் குற்றச்சாட்டு
துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் குறைந்தே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் முடித்து வெளியில் செல்பவர்கள் சாதாரண பணிகளுக்கு மட்டுமே செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். அரசு பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்’ என்றார். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் கல்வி சிறப்பாக உள்ளதாக ஒன்றிய அரசே தெரிவித்து உள்ள நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை எக்ஸ் தளப் பக்கத்தில், ‘காவல்துறையைப் பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்’ என்று பதிவிட்டுள்ளனர்.
* கவர்னர் ஆர்.என்.ரவிக்கு துணை ஜனாதிபதி ‘அட்வைஸ்’
மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொள்ளாததால் ஆளுநர் மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். அவர் பேச்சிலும் அதனை வெளிப்படுத்தினார். இதனை கண்ட துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசும்போது கவர்னரை பார்த்து, ‘‘சில துணைவேந்தர்கள் வராமல் இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்காக, நீங்கள் வருத்தப்படவேண்டாம்’’ என ‘அட்வைஸ்’ செய்து பேசினார்.
* துணை ஜனாதிபதியை அசிங்கப்படுத்திய ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின், அரசு நிர்வாகத்தில் தலையீடு, பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்தில் தன்னிச்சையான செயல்பாடு, கல்வித்துறையில் பல குழப்பங்கள், சர்ச்சை பேச்சு என பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்குகளில் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்று பலமுறை கூறியும், தனக்கு அரசியலமைப்பு சட்டம் பொருந்தாது என்பதுபோல் அவரது செயல்பாடுகள் இருந்தது. இதையடுத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இருந்தும், ஆளுநரின் அத்துமீறல் செயல்கள் அடங்கவில்லை.
தமிழக அரசுக்கு எதிராக காய் நகர்த்துவதாக நினைத்து, டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்கள், துணை ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர், ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படும். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. துணை ஜனாதிபதியை அழைத்தால் துணை வேந்தர்கள் வருவார்கள் என ஆளுநர் கணக்கு போட்டார். ஆனால், வேந்தராக முதல்வர் இருப்பதால் பெரும்பாலான துணை வேந்தர்கள் புறக்கணித்தனர். இதனால் தமிழக அரசுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதாக ஆர்.என்.ரவி கட்டிவைத்திருந்த பிம்பம் உடைந்தது.
துணை ஜனாதிபதியை அழைத்து ஆளுநர் அசிங்கப்படுத்தியதால் அவர் கடும் அதிருப்தியடைந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் கடும் விரக்தியில் இருந்தார். ஆளுநரின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாநாட்டில் தமிழக அரசு மீதும், கல்வி நிலை குறித்தும் சேற்றை வாறி இறைத்தார். தமிழ்நாட்டுக்கு என்று எப்போதும் தனி குணம், பாரம்பரியம் உள்ளது. கொள்கை பிடிப்பில் உறுதியாக இருப்பார்கள். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களிடம் என்றைக்கும் அடி பணிந்து போக மாட்டார்கள். பிரதமரே அழைத்தாலும் இதே நிலைதான். அதை மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு நிரூபித்து உள்ளது.
* இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் நம்பர் 1 ஒன்றிய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டின் கல்வித்துறை மீது ஆளுநர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ள நிலையில், இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் நம்பர் 1 என்று ஒன்றிய அரசே ஒப்புதல் அளித்து உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு இருந்தார். அதில், தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 30 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்தரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட் ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள். இதன் மூலம் உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. இதேபோல், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் என பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பெரியார் பல்கலை சார்பில் 2 பிரதிநிதிகள் துணைவேந்தருக்கு கண்டனம்
ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று அவரிடம், 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், தனது பிரதிநிதிகளாக 2 பேராசிரியர்களை, மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் யோகானந்தன் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் இயக்குநர் பிரகாஷ் ஆகியோரை பிரதிநிதிகளாக துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஊட்டி மாநாட்டை புறக்கணித்துள்ள வேறு எந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களும், இதுபோன்று தங்களது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவில்லை. மாநாட்டிற்கு சென்றுள்ள பேராசிரியர்கள் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. ஆணவ போக்கோடு ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு, தமிழக அரசின் கொள்கைக்கு நேர்மாறாக தனது ஆட்களை துணைவேந்தர் ஜெகநாதன் அனுப்பி வைத்துள்ளார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், தமிழக அரசின் உயர் கல்வித் துறை, உரிய விசாரணை நடத்தி, யோகானந்தன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
* முதுமலை செல்லும் துணை ஜனாதிபதி: சுற்றுலா பயணிகளுக்கு தடை
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நேற்று பிற்பகலில் ஊட்டி அருகே முத்தநாடு தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு அவர்கள் வழிபடும் கோயிலை பார்வையிட்டார். அவர்களின் கலாசாரம் குறித்து கேட்டறிந்தார். தோடர் பழங்குடியின மக்கள் அவரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். இன்று அவர், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார். இதற்காக ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதிக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் முதுமலை செல்கிறார். இதனால், இன்று (26ம் தேதி) காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதுமலையில் உள்ள தெப்பக்காடு முகாமில் வாகன சுற்றுலா நிறுத்தப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் வழக்கமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
The post ஊட்டியில் ஆளுநர் தலைமையில் மாநாடு 35 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு: ஆர்.என்.ரவி கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.