சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வரும் வரை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு வரும் ஜூன் இறுதி வரை ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.