சென்னை: ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ராஜ்பவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மாநாடு வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஏப்.25-ம் தேதி முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார்.