*நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கற்பூர மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விட வேண்டும் என நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி நகராட்சி நகர் மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஸ்டேன்லி பாபு, துணைத் தலைவர் ரவிக்குமார் மற்றும் பொறியாளர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர் மன்ற கூட்டம் துவங்கியவுடன் துணைத் தலைவர் ரவிக்குமார் பேசியதாவது:நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், ரூ.500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையையும் திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் வரும் 6ம் தேதி ஊட்டி வருகிறார்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர், துணை முதல்வர், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோருக்கு நன்றி. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்லிமந்து, கம்பிசோலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன.
அந்த மரங்களை ஏலம் விட்டு வெட்டி அகற்றுவதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க முடியும். அதேபோல, நகராட்சி வளாகத்தில் ஏராளமான பழுதடைந்த வாகனங்கள் மற்றும் பல்வேறு இரும்பு பொருட்கள் கொட்டி கிடக்கிறது. இதனையும் ஏலம் விட்டு, அதில் இருந்து வரும் தொகையை கொண்ட ஜேசிபி, டிப்பர் லாரி போன்றவைகள் வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி நகரின் பல்வேறு சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ஒர்க்ஷாப், பழைய இரும்பு கடைகள் மற்றும் வாட்டர் வாஷ் மையங்களை நகரின் ஒதுக்குப்புறங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். ஊட்டி நகரில் கட்டப்பட்டு வரும் அனைத்து கழிப்பிடங்களும் வரும் மே மாதத்திற்கு முன்னதாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு துணைத் தலைவர் ரவிக்குமார் பேசினார்.
ஜார்ஜ் (திமுக.,):
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் போது, சிலர் பத்திரிக்கையாளர்கள் எனக் கூறிக்கொண்டு கான்ட்ரக்டர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி ஏரியை சுற்றிலும் சதுப்பு நிலமாக உள்ளது. இது பாதிக்கும் வகையில் தற்போது அங்கு தூர் வாரம் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அங்கு சதுப்பு நிலம் பாதிக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடப்பமந்து பகுதியில் நகராட்சி மற்றும் தொட்டபெட்டா ஊராட்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் விளையாட்டு சாதனங்களை அமைத்துள்ளது. அவர்களுக்கு பல கோடி வருவாய் கிடைத்த போதிலும், ஊட்டி நகராட்சிக்கு எவ்விதமான கேளிக்கை வரியும் செலுத்துவதில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நகராட்சிக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்தபா (திமுக.,):
பாம்பேகேசில் பகுதியில் குடிநீர் முறையாக வருவதில்லை. அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல், குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பேகேசில் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (திமுக.,)
தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில், தண்ணீர் பிரச்னை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். தற்போது ஊட்டி நகரில் முறையாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுப்பதில்லை. இதனால், எனது வார்டில், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. குப்பை எடுக்கும் போது, முழுமையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா (திமுக.,):
எனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளதால், குடிநீர் விணாகிக் கொண்டிருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும். அதபோல், கழிவு நீர் கால்வாய்கள் உடைந்து கழிவு நீர் நடைபாதையில் செல்கிறது. அதனையும் சீரமைக்க வேண்டும்.
கஜேந்திரன் (திமுக.,):
ஊட்டி நகரின் நுழைவு வாயில் பகுதியான வேலிவியூ பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் டெஸ்ேகாப் அமைக்கப்படும். ஐ லவ் ஊட்டி போன்றவைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் டெலஸ்கோப் அமைக்கப்படவில்லை.
எனவே, அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் டெலஸ்கோப் மையம் அமைக்க வேண்டும். தலையாட்டு மந்து மயானத்தில் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார் (அதிமுக.,):
பட்பயர் முதல் பாரதிநகர் வரையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பு (அதிமுக.,):
ஓல்டு ஊட்டி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். முறையாக சுத்தகரிப்பு செய்த பின் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்கீம்பாபு (அதிமுக.,):
12வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வர வில்லை. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தல் செல்லும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கவுன்சிலர் ரஜினிகாந்த் பேசுகையில்:
‘‘ஊட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் தற்போது தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனது வார்டிற்கு உட்பட்ட விஜயநகரம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன.
இவைகள் மக்களை விரட்டி கடிக்கின்றன.
எனவே, இவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளது. முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
The post ஊட்டி நகராட்சி பகுதியில் கற்பூர மரங்களை வெட்ட ஏலம் விட வேண்டும் appeared first on Dinakaran.